நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 10 லட்சம் பேர் பங்கேற்பு
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா 2021 நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள் தனியார்மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வணிகர்கள் தொழில் அதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
THANKS FOR READING THIS ARTICLE
KEEP SUPPORTING💚

<< Home